Thursday, February 24, 2011

டெல்லி:ஜாமிஆ மில்லியாவுக்கு சிறுபான்மை அந்தஸ்து

புதுடெல்லி,பிப்.23:டெல்லியில் ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யா பல்கலைக்கழகம் சிறுபான்மை அந்தஸ்து பெற்ற நிறுவனம்தான் என தேசிய சிறுபான்மை கல்வி கமிஷன் தீர்ப்பளித்துள்ளது.


முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கு பதிலாக பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்குத்தான் ஜாமிஆ மில்லியா இடஒதுக்கீடு வழங்கவேண்டும். இல்லாவிடில் பல்கலைக்கழகத்திற்கான மானியம் வாபஸ் பெறப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு(U.G.C) மிரட்டிக் கொண்டிருக்கும் வேளையில்தான் வரலாற்றுச்சிறப்புமிக்க இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 30(1)- மற்றும் தேசிய சிறுபான்மை கல்வி கமிஷனின் சட்டத்தின் பிரிவு 2(g) ஆகியவற்றின் அடிப்படையில் ஜாமிஆவுக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை நீதிபதி எம்.எஸ்.எ

சித்தீக், மொஹிந்தர் சிங் மற்றும் சிரியாக் தாமஸ் ஆகியோரைக் கொண்ட போல்வு நீதியியல் அதிகார குழு(quasi judicial body) வழங்கியது.

முஸ்லிம் சமுதாயம் நடத்திய சட்டப் போராட்டத்தின் முடிவில் கிடைத்த நல்லதொரு தீர்ப்பாகும் இது.

ஜாமிஆ மாணவர் யூனியன், ஜாமிஆ ஆசிரியர்கள் சங்கம், முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு, ஜாமிஆ முன்னாள் மாணவர் அமைப்பு, ஷம்ஸ் பர்வேஸ், ஜாவேத் ஆலம் ஆகியோர் ஆதரவாகவும், ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யாவின் துணைவேந்தர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மத்திய சிறுபான்மை அமைச்சகம் ஆகியவற்றின் செயலாளர்கள்

எதிர் தரப்பினராகவும் புகார் அளித்தனர்.

இந்திய அரசியல் சட்டத்தின் 30(1) பிரிவின்படி ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகத்தை சிறுபான்மை நிறுவனமாக அறிவிக்க வேண்டுமனக்கோரி 2006-ஆம் ஆண்டு ஜாமிஆ ஆசிரியர்கள் சங்கம்

முதன்முதலாக புகார் மனு அளித்தது. அதன் பிறகு இதர நபர்கள் கட்சிதாரர்களாக இணைந்தனர்.

இதற்கெதிராக பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் எஸ்.எம்.அஃப்ஸல் 2006 அக்டோபர் 13-ஆம் தேதி கமிஷன் முன்பாக ஆஜராகி எதிர் சத்தியப் பிரமாண வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் ஜாமிஆ சிறுபான்மை நிறுவனமல்ல என தெரிவித்திருந்தார். ஆனால், முதல் சத்தியபிரமாண வாக்குமூலத்திற்கு மாற்றமாக தற்போதைய பதிவாளர் பேராசிரியர் எஸ்.எம்.ஸாஜித் சமர்ப்பித்த சத்திய பிரமாண வாக்குமூலம் இவ்வழக்கில் திருப்புமுனையாக அமைந்தது. அவர் தனது சத்தியபிரமாண வாக்குமூலத்தில், மெளலானா முஹம்மது அலி ஜவஹரும், ஹக்கீம் அஜ்மல் கானும் இணைந்து முஸ்லிம் சமுதாயத்திற்காக 1920-ஆம் ஆண்டு நிறுவியதுதான் இந்நிறுவனம் என தெரிவித்திருந்தார்.

ஜாமிஆவின் பழையகால வரலாற்றை விளக்கும் சில நூல்களையும் இதற்கு ஆதாரமாக ஸாஜித் சமர்ப்பித்தார். இந்த சத்தியப்பிரமாண வாக்குமூலம்தான் ஜாமிஆவின் நிலைப்பாடு புகார் அளித்தவர்களுக்கு ஆதரவாக மாறியது என கமிஷன் சுட்டிக்காட்டியது.

ஒரு நிறுவனத்தின் மதரீதியான அடிப்படையில் சிறுபான்மை அந்தஸ்து அளிப்பதற்கு மூன்று விஷயங்கள் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும் என தீர்ப்பில் கமிஷன் விளக்கியுள்ளது.

1.அக்கல்வி நிறுவனத்தை நிறுவியது சம்பந்தப்பட்ட சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த உறுப்பினர்களாக இருக்கவேண்டும்.

2.நிறுவனம் சிறுபான்மையினரின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

3.சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தை நிர்வகிப்பது சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்களாகயிருக்க வேண்டும்.

கடந்த 1962-ஆம் ஆண்டு 1956-ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக்குழுவின் சட்டத்தின்படி பல்கலைக்கழகமாக ஜாமிஆ மாறியது.

பல்கலைக்கழகத்தின் பெயரிலுள்ள ஜாமிஆ, மில்லியா என்ற வார்த்தைகளே சிறுபான்மையினரின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. மேலும் பல்வேறு கமிட்டிகளின் பெயர்களும் இதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டப்பட்டன. ஜாமிஆவுக்கு நிலத்தையும், கட்டிடத்தையும் வழங்கியது முஸ்லிம் சமுதாயமாகும்.

ஜாமிஆவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபொழுது முன்னாள் ஜனாதிபதியான டாக்டர்.ஜாஹிர் ஹுஸைன் உள்ளிட்ட பேராசிரியர்கள் ஒன்று சேர்ந்து 150 ரூபா வீதம் அக்காலக்கட்டத்தில் சேகரித்துள்ளனர். நிறுவனம் தொடர்ந்து நடைபெற அஞ்சுமன்-இ-தஃலீமி என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி 1939-ஆம் ஆண்டில் அதனை ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யா என்ற பெயரில் பதிவும் செய்தனர்.

ஏற்கனவே சிறுபான்மை சமுதாயம் நடத்திக்கொண்டிருந்த நிறுவனத்தில் பின்னர் இதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் சேர்ந்துள்ளதால் அந்நிறுவனம் சிறுபான்மை அந்தஸ்தை இழந்துவிடாது என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும் சுட்டிக்காட்டப்பட்டது.

செய்தி:மாத்யமம்